உள்ளூர் செய்திகள்

சுந்தராபுரம்-மதுக்கரை ரோட்டில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்

Published On 2023-11-02 09:13 GMT   |   Update On 2023-11-02 09:13 GMT
  • வாகனங்கள் அதிவேகமாக செல்வதை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட்டது மகிழ்ச்சி என மக்கள் கூறியுள்ளனர்.
  • நடந்து செல்பவர்களுக்கு வசதியாக நடைபாதை அமைத்துக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றனர்.

குனியமுத்தூர்,

கோவை சுந்தராபுரம்-மதுக்கரை சாலையில் மதுக்கரை மார்க்கெட், வேலந்தாவளம், மற்றும் கேரளா போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அதிகளவில் சென்று கொண்டிருக்கும்.

இதனால் இந்த சாலை எப்போதும் மிகுந்த பரபரப்பான பகுதியாகவே காணப்படும். பல சமயங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது.

இதற்கு முக்கிய காரணமாக அந்த பகுதியில் சாலைையயொட்டி இருந்த ஆக்கிரமிப்புகளே காரணம் என்றும், அதனை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, நெடுஞ்சாலைத் துறையினர் சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்க பணிக்கான ஏற்பாடுகளை தொடங்கினர்.

அதன்படி சாலை நன்கு விரிவாக்கப்பட்டு போக்குவரத்திற்கு சிரமம் இன்றி அமைக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் அதிவேகமாக அந்த சாலையில் செல்ல தொடங்கின.

இதனால் சாலையின் ஒரு பகுதியை விட்டு மற்றொரு பகுதிக்கு கடப்பது மக்களுக்கு சிரமமாகியது. சில நேரங்களில் மக்கள் விபத்தில் சிக்கும் நிலைமையும் உருவானது. ஏனென்றால் வாகனத்தில் வருவோம் மெல்ல வராமல் அதிவேகத்தில் வருகின்றனர். வாகனம் வெகுதூரம் வருகிறதே என்று சாலையை கடந்தால், வேகமாக வந்து நம்மீது மோதுவது போல் நின்று விடுகிறது. எனவே இதற்கு சாலையின் நடுவே தடுப்புகள் வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் இதற்கு தீர்வு காணும் வகையில், சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கும் பணியை தொடங்கினர். முதல் கட்டமாக சுந்தராபுரத்தில் இருந்து காமராஜர் நகர் வரை இந்த தடுப்புகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த சாலையின் மற்ற பகுதிகளிலும் தடுப்புகள் வைக்கும் பணி நடக்க உள்ளது.

இதுகுறித்து மக்கள் கூறும் போது, வாகனங்கள் அதிவேகமாக செல்வதை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட்டது மகிழ்ச்சி. இதனால் வாகனங்கள் மிதமான வேகத்தில் செல்லும்.

தடுப்பு வைக்கப்பட்டதால் சாலையின் அகலம் குறைந்துள்ளது. எனவே நடந்து செல்பவர்களுக்கு வசதியாக நடைபாதை அமைத்துக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றனர்.

Tags:    

Similar News