வேலை வாய்ப்பை பெருக்க உறுதுணையாக இருக்க வேண்டும் -வங்கியாளர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
- இணை மானிய திட்ட பயிற்சி நடந்தது.
- தொழில் முனைவோருக்கு உறு துணையாக இருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இணை மானிய திட்ட பயிற்சி நேற்று நடந்தது. இதை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்து பேசியதாவது: -
மாவட்டத்தில் பர்கூர், காவேரிப்பட்டணம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஒன்றியங்களில் உலக வங்கி நிதியுதவியுடன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் ஊராட்சி பகுதிகளில் தொழில் முனைவோர்களை உருவாக்கி வருகிறது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் வழங்கப்படும் இணை மானிய திட்டத்தினை ஊரகப் பகுதிகளில் உள்ள தொழில்முனை வோர்களுக்கு வங்கி கடன் வழங்கி, ஊரக பகுதிகளில் வேலை வாய்ப்பு பெருக்கிட வங்கியாளர்கள் தொழில் முனைவோருக்கு உறு துணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பயிற்சியில் மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன், நபார்டு உதவி பொது மேலாளர் ஜெய்பிரகாஷ், முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, தாட்கோ பொது மேலாளர் யுவராஜ் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் செயல் அலுவலர்கள் பிரதீப்குமார், ஜெய்குமார், சிவலிங்கம், முத்துகுமார் மற்றும் இளம் வல்லுனர் ஆனந்த், திட்ட பணியாளர்கள் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.