கோவையில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை கொள்ளை
- வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
- 2 வீடுகளிலும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
கோவை,
கோவை இருகூர் எல்ஜி நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஆஷா ராணி (வயது 34). இவர் நர்சாக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் ஆஷா ராணி இரவு நேரத்தில் தூங்குவதற்காக தனது தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று அதேபோல அவர் வீட்டை பூட்டிவிட்டு தனது தாயார் வீட்டுக்கு தூங்க சென்றார்.
பின்னர் மறுநாள் காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்து 3½ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதேபோன்று அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி கதிர்வேல் (57) என்பவர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து அவரது வீட்டில் இருந்த மர பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இதுகுறித்து ஆஷா ராணி மற்றும் கதிர்வேல் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் 2 வீடுகளிலும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்த வீடுகளில் நகைகளை கொள்ளை யடித்த திருடர்களை தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கருமலை செட்டிப்பாளையம் பகுதியில் இதேபோன்று 2 வீடுகளில் திருட்டு போயிருந்தது.
எனவே இந்த வீடுகளில் கொள்ளை அடித்தது ஒரே கும்பலாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. போலீசார் அந்த வீடுகளில் கைப்பற்றிய தடையங்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் கோவையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.