ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் 14 பவுன் நகை திருட்டு
- 14 பவுன் தங்க நகையை பையில் வைத்திருந்ததை நோட்டமிட்டவர் அதனை திருடிச்சென்றது தெரியவந்தது.
- போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிராக்களை காட்சிகளை வைத்து திருடிய தேடி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
கோவை மாவட்டம் இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மனைவி அனிதா (வயது 37). இவர்கள் ஒட்டன்சத்திரத்தில் நடந்த உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக பஸ்நிலையம் வந்தனர்.
அப்போது அனிதா தான் கழுத்தில் அணிந்திருந்த 14 பவுன் தங்க நகையை கழற்றி அதை ஒரு பையில் சுற்றி கட்டைப்பையில் வைத்துக் கொண்டார்.
பஸ்சில் ஒரு வேளை தூங்கி விட்டால் நகை தொலைந்து விடும் என்ற அச்சத்தில் அவர் இவ்வாறு வைத்துள்ளார். ஆனால் இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பையில் இருந்த 14 பவுன் நகையை திருடிச் சென்று விட்டனர். பஸ்சுக்கு காத்திருந்த அவர்கள் சிறிது நேரம் கழித்து பையில் சோதனையிட்டபோது நகை திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம் பஸ்நிலையத்தில் தொடர்ந்து செல்போன், மோட்டார் சைக்கிள், பயணிகளின் பணம் திருடப்பட்டு வருகிறது.
ஆனால் கொள்ளையர்கள் பிடிபடாமல் உள்ளனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சத்துடனேயே கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.