நீர்வரத்து நிறுத்தப்பட்டதால் மணல் வெளியாக காட்சி அளிக்கும் கல்லணை
- கடந்த 23-ம் தேதியுடன் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
- சுற்றுலா பயணிகள் சிறிதளவு ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரில் இறங்கி குளித்து மகிழ்கின்றனர்.
பூதலூர்:
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் வழக்கமான ஜூன் 12 தேதிக்கு முன்னதாக மே மாதம் 24 ஆம் தேதி திறக்கப்பட்டது.
இதனால் காவேரி டெல்டா மாவட்டங்களில் இலக்கை விஞ்சி குருவை மற்றும் சம்பா சாகுபடி நடைபெற்றது பருவம் தப்பிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியது.
248 நாள் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வழக்கமான நடைமுறைப்படி ஜனவரி மாதம் 28ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் விவசாயிகளின் தேவைக ளுக்கு ஏற்ப குறைந்த அளவில் தண்ணீர் அவ்வப்போது மாறி மாறி விடப்பட்டது.
மேட்டூர் அணை மூடப்பட்ட பின்னர் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி வரை கல்லணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், காவிரி வெண்ணாறு ஆகிய ஆறுகளில் முழுவதுமாக தண்ணீர் விடுவது பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி மாலையுடன் நிறுத்தப்பட்டது.
தற்போது கல்லணை முழுவதுமாக வறண்டு போய் மணல் வெளியாக காட்சியளிக்கிறது.
சிறிய அளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. சிறிய அளவில் வரும் தண்ணீர் கொள்ளிடம் மணல் போக்கி பகுதியில் திறந்து வெளியேறி கொண்டு உள்ளது.
காவேரி வெண்ணாறு ஆகிய பாலங்களின் கீழ் பகுதியில் முழுவதுமாக தண்ணீர் இன்றி காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.
கல்லணையை காண வரும் சுற்றுலா பயணிகள் கொள்ளிடம் ஆற்றில் சிறிதளவு ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரில் இறங்கி குளித்து மகிழ்கின்றனர்.
கல்லணை பாலங்களின் மேல் நடந்து கல்லணையை ரசித்து வருகின்றனர்.
சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு அரங்குகளில் சிறுவர்கள் விளையாடி மகிழ்கின்றனர்.
காவிரி ஆற்றின் பாலங்களின் கீழ் இறங்கி மதகுகளை பார்த்து வியந்து சுற்றுலா பயணிகள்வருகின்றனர்.