உள்ளூர் செய்திகள்

சுவாமி கற்குவேல் அய்யனார் அலங்காரத்தில் இருந்த காட்சி.

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர்வெட்டு திருவிழா தொடங்கியது

Published On 2022-11-18 09:36 GMT   |   Update On 2022-11-18 09:36 GMT
  • தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.
  • கள்ளர் வெட்டு நடந்த இடத்தில் மணலை எடுத்துச் செல்வார்கள்.

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தேரிக்குடியிருப்பு அருகே குதிரைமொழி தேரியில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவில் தென் மாவட்டங்களில்மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.

இங்கு ஆண்டுதோறும் கள்ளர் வெட்டுதிருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். கடந்த 2 வருடமாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாட்டுகளுடன் கொண்டாடப்பட்டது.

இந்த வருட திருவிழா மிகவும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. நேற்று கார்த்திகை மாத பிறப்பையொட்டி சிறப்பு அலங்கார பூஜையும், வில்லிசையும், தொடர்ந்து பொதுவிருந்து அன்னதானத்துடன் திருவிழா தொடங்கியது.

திருவிழா தொடங்கி யதையொட்டி தினசரி காலையிலும், மாலையிலும் சிறப்பு பூஜைகளும், இரவு வில்லிசையும் தொடர்ந்து நடைபெறும். விழாவின் முக்கிய நாளான 28 -ம் திருநாளான டிசம்பர் 14-ந் தேதி மாலை 6 மணிக்கு ஐவர்ராஜா பூஜையும், டிசம்பர் 15-ந் தேதி காலை முதல் இரவு வரை முழு நேர சிறப்பு பூஜையும், மாலையில் திருவிளக்கு பூஜை, மாவிளக்கு பூஜை நடக்கிறது.

டிசம்பர் 16-ந் தேதி காலை 8 மணிக்கு தாமிரபரணி ஆற்று தீர்த்தம் மேளதாளத்துடன் எடுத்து வரப்படுகிறது. நண்பகல் 11 மணி அளவில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள், மாலை 4 மணிக்கு சுவாமிகள் கள்ளர் வெட்டு நிகழ்ச்சிக்கு புறப்படுதல், மாலை 4.30 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள செம்மண் தேரியில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடைபெறும்.

இதைக்காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். தமிழகத்தில் பல ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து கோவிலில் மூன்று நாள் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்து, கள்ளர் வெட்டு நடந்த இடத்தில் மணலை எடுத்துச் செல்வார்கள். இதை புனித மணல் என கூறி பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வார்கள். விவசாயம், வியாபாரம், புதிய கட்டிடங்கள் கட்டும்போது இந்த மணலை பயன்படுத்துவார்கள். உடல் நலக் கோளாறு ஏற்பட்டால் இந்த மணலை எடுத்து உடலில் பூசுவார்கள்.

திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செயல் அலுவலர் காந்திமதி மற்றும் தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறையினர், ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News