தசரா திருவிழாவையொட்டி பாளையில், 12 அம்மன் கோவில்களில் கால்நாட்டு விழா
- பாளையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் தசரா விழா நடைபெறும்.
- கோவில் முன்பு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கால் நாட்டுதல் விழா நடைபெற்றது.
நெல்லை:
தென்மாநிலங்களில் பிரசித்தி பெற்ற திரு விழாக்களில் ஒன்றான நவராத்திரி தசரா விழா குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு அடுத்த படியாக நெல்லை மாவட்டம் பாளையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் நடைபெறும்.
கால் நாட்டுதல்
தசரா விழாவின் போது பாளை பகுதியில் உள்ள 12 அம்மன் கோவில்களில் இருந்தும் மின்விளக்கு அலங் காரத்தில் உருவாக்கப்பட்ட சக்கரங்களில், சிம்ம வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி மகிஷாசுர சம்காரம் நடைபெறும். இந்த பிரசித்தி பெற்ற விழாவின் தொடக்க நிகழ்வான கால் நாட்டு வைபவம் இன்று பாளை பகுதியில் உள்ள 12 அம்மன் கோவில்களிலும் விமர் சையாக நடைபெற்றது.
இந்த 12 அம்மன் கோவில்களிலும் மூல தெய்வமாக கருதப்படும் பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் இருந்து திரிசூலம் பொறித்த கொடி மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கால் நாட்டுதல் விழா நடைபெற்றது.
தொடர்ந்து மகா தீபா ராதனை நடை பெற்றது. இதனை தொடர்ந்து பாளை வடக்கு முத்தாரம்மன், தேவி ஸ்ரீ முத்துமாரியம்மன், தூத்துவாரி அம்மன் உள்ளிட்ட 12 கோவில் களிலும் கால் நாடுதல் வைபவமும் அதனை தொடர்ந்து அம்பாளுக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது.
மகிஷாசூரசம்ஹாரம்
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 12 அம்பாள் திருவீதி உலா வருகிற அக்டோபர் 24-ந் தேதியும், மறுநாள் (25-ந் தேதி) மகிஷாசூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது.