உள்ளூர் செய்திகள்

குப்பை இல்லா குமரி எனும் விழிப்புணர்வு நடைபயணம் இன்று களியக்காவிளையில் நடைபெற்றபோது எடுத்த படம்

களியக்காவிளை முதல் குழித்துறை வரை குப்பையில்லா விழிப்புணர்வு நடைபயணம்

Published On 2022-12-12 07:51 GMT   |   Update On 2022-12-12 07:51 GMT
  • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
  • கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், வியாபாரிகள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தை குப்பை இல்லா பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றும் விதமாக குப்பை இல்லா குமரி எனும் விழிப்புணர்வு நடைபயணம் இன்று களியக்காவிளையில் தொடங்கியது.

அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி, நடைபயணத்தை தொடங்கி வைத்து கலந்து கொண்டார். இதில் கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், வியாபாரிகள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர். நடைபயணத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

முன்னதாக அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு 95 சதவீதம் நடைபெற்றுள்ளது. அதனை 100 சதவீதமாக மாற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

அதில் பங்களித்த அரசு அதிகாரிகள், பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்போது அதன் 2-ம் கட்டமாக குப்பை இல்லா குமரி எனும் திட்டத்தை அறிவித்து அதனை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என செயல்படுத்தி வருகிறோம். மக்கள் பங்களிப்பு இருந்தால் தான் வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும் என்பதற்காக கல்லூரி மாணவர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், இளைஞர்கள் அழைத்து வாக்கத்தான் நிகழ்வை தொடங்கி உள்ளோம். தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இது நடைபெற இருக்கிறது.

பிளாஸ்டிக் ஒழிப்பில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளோம். மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பொதுமக்கள் தாங்களாக பிரித்து வழங்கி வருகிறார்கள்.

உறிஞ்சி குழி அமைத்து சுமார் 60 சதவீதம் வீடுகளில் கழிவுகள் வெளியில் விடவில்லை. குமரி மாவட்டமானது சுமார் 6 மாதத்திற்குள் குப்பையில்லா மாவட்டமாக மாறும் சூழல் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு நடைபய ணத்திற்கு மார்த்தாண்டம் லிஸ்டர் சந்திப்பில் லிஸ்டர் ஹார்ட் மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

மேலும் நடந்து வந்தவர்களுக்கு குளிர்பா னம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இயக்குநர் டாக்டர் அரவிந்த் மற்றும் லிஸ்டர் குழந்தையின்மை சிகிச்சை மைய நிபுணர் டாக்டர் ஆனந்தி விஜயன் ஆகியோர் அமைச்சர் மனோதங்கராஜிக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த விழிப்புணர்வு நடை பயணமானது குழித்துறை வரை சென்றது.

Tags:    

Similar News