கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை சொகுசு படகுகளை 17-ந் தேதி முதல் இயக்க முடிவு
- ரூ.8 கோடி செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் என்ற அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது.
- இவை இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது.
இவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 கோடி செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய பெயர்களை தாங்கிய அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது.
இந்த 2 அதிநவீன படகுகளும் விவேகானந்த மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.
சொகுசு படகுகளை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை கடலில் சுற்றுலா பயணிகள் உல்லாச பயணம் சென்று வர பயன்படுத்த வேண்டும் என்று தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் பயனாக இந்த 2 அதிநவீனசொகுசு படகுகளையும் வருகிற 17-ந்தேதி முதல் படகு சவாரி நடத்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.