சவுதி அரேபியாவில் குமரி மீனவர் மயங்கி விழுந்து பலி
- குறும்பனையில் உள்ள அவரது உறவினர்கள் சோகம்
- பலியான குமரி மீனவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாகர்கோவில்:
குளச்சல் அருகே குறும் பனை பகுதியை சேர்ந்தவர் சகாயரோஜஸ் (வயது 44). இவர் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்று மாலை சகாயரோஜன் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தயாரானார். அப்போது திடீரென சகாயரோஜஸ் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து சக மீனவர்கள் அவரை மீட்டு பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சகாயரோஜஸ் இறந்த தகவல் குறும்பனையில் உள்ள அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலி யான சகாயரோஜஸுக்கு சகாயமெல்பா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு தான் சகாயரோஜஸின் தாயார் இறந்தார். இதையடுத்து அவர் ஊருக்கு வந்தி ருந்தார். பின்னர் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் இங்கிருந்து சவுதி அரேபியாவிற்கு சென்றார்.
இந்த நிலையில் அவர் பலியாகி இருப்பது அவரது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலி யான சகாயரோஜஸின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.