உள்ளூர் செய்திகள்

அப்டா மார்கெட்டில் கிழங்கு வகைகளை தேர்வு செய்யும் பெண்கள்.

குமரி மாவட்டத்தில் மார்கெட்டுகளில் பொங்கல் விற்பனை களை கட்டியது

Published On 2023-01-14 08:22 GMT   |   Update On 2023-01-14 08:22 GMT
  • கிழங்குகள், மஞ்சள் குலைகள் விற்பனை அமோகம்
  • கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ஏற்பாடு

நாகர்கோவில்:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டா டப்படுகிறது.பொங்கல் பண்டிகையொட்டி புதுமண தம்பதியினருக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்குவது ஐதீகம். அதன்படி குமரி மாவட்டத்தில் புதுமணத் தம்பதியினருக்கு சீர்வரிசை பொருள்களை பெற்றோர் வழங்கி வருகிறார்கள். சீர்வரிசை பொருள்களாக பொங்கல் பானை,கரும்பு புத்தாடைகள் மற்றும் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து கடை வீதிகளில் இன்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோட்டார் மார்க்கெட் பகுதியில் பொருட்கள் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். தங்களுக்கு தேவையான பானைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர். வட சேரி மார்க்கெட் அப்டா மார்க்கெட்டிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏற்கனவே காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் கிழங்கு வகை களின் விலையும் அதிகமாக இருந்தது.

கட்டபொம்மன் சந்திப்பு வடசேரி பகுதிகளில் சாலையோரங்களில் கிழங்கு வகைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது.மேலும் பொங்கல் தயார் செய்ய பயன்படுத்தப்படும் பனை ஓலைகளும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தது. மஞ்சள் குலைகள், கிழங்கு வகைகளையும் பொது மக்கள் வாங்கி சென்றனர்.

நாகர்கோவில் நகரில் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைவீதிகளிலும் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் அதிகமாக இருந்தது. மார்த்தாண்டம் தக்கலை இரணியல் அஞ்சு கிராமம் பகுதிகளில் உள்ள கடைவீதிகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. துணிக்கடைகளில் புத்தா டைகள் எடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்து இருந்தனர்.

நாளை 15-ந் தேதி காலையில் வீடுகள் முன்பும் கோவில்கள் முன்பும் பொதுமக்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்ய உள்ளனர்.பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் ஆகும். 17-ந் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.எனவே சுற்றுலா தளங்களில் பாதுகாப்பை அதிகரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் .மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி, சொத்த விளை குளச்சல் வட்டக் கோட்டை பீச் பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திற்பரப்பு அருவியிலும் ஏராளமான பொதுமக்கள் வருகை தருவார்கள் என்பதால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு போட ஏற்பாடு செய்துள்ளனர். மாத்தூர் தொட்டில் பாலம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

Tags:    

Similar News