திருவட்டார் அருகே குட்டகுழி மகாதேவர் கோவிலில் ரூ.1 லட்சம் வெள்ளி பொருட்கள் கொள்ளை
- மர்மநபர்கள் கைவரிசை
- அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே குட்டைக்குழி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டிலுள்ள கும்பளத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலையில் பூஜை நடப்பது வழக்கம்.
நேற்று கோவிலில் பூஜைகள் முடிந்த பின்னர் பூசாரிகள் கோவில் நடையை அடைத்துவிட்டு சென்றனர்.
இன்று காலை யில் பூஜை செய்வதற்காக ராமன் போற்றி கோவிலுக்கு சென்றார். உள்ளே சென்று பார்க்கும்போது கோவிலில் இருந்த பெரிய 15 கிலோ எடையிலுள்ள அணையா விளக்கு, மற்றும் 20 கிலோ எடையிலான பெரிய மணி மற்றும் 10 கிலோ மதிப்பிலான சிறிய மணிகள் உட்பட சுமார் 60 கிலோ எடையிலான வெண்கல பொருட்கள் மாயமாகி இருந்தது.
இதன்மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதனை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இதையடுத்து அர்ச்சகர் ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார். அவர்கள் சம்பவம் குறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் கொள்ளை நடந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த ஆலயத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது. அதன் பிறகு தினமும் அதிகளவு பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அருகே நரசிம்மர் ஆலயத்தில் உண்டியில் பணம் திருட்டு போனநிலையில் தற்போது திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்,