கன்னியாகுமரி அருகே வாலிபரை கத்திரிக்கோலால் குத்திய சலூன் கடைக்காரர் கைது
- மதுபோதையில் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர்கள் இருவருக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
- கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சலூன் கடைக்காரரை கைது செய்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால்விளை அம்மன் கோவில் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 34).
இவரும், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 34). என்பவரும் நண்பர்கள். இசக்கி முத்து ஒற்றையால்விளையில் தங்கியிருந்து சின்னமுட்டம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இருவரும் ஒற்றையால்விளை சமுதாய நலக்கூடம் அருகே மதுபோதையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து தனது கையில் வைத்திருந்த கத்திரிக்கோலால் பிரபுவை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த பிரபுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கன்னியா குமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இசக்கி முத்துவை கைது செய்தனர்.