குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் காதலர் தின நாளில் அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
- உலகம் முழுவதும் நாளை (14-ந் தேதி) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது.
நாகர்கோவில்:
உலகம் முழுவதும் நாளை (14-ந் தேதி) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது.
காதலர் தினத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ள நிலையில்,காதலை வெளிப்படுத்தும் கொண்டாட்டத்திற்கு பலரும் தயாராகி வரு கின்றனர். தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் பரிசு வழங்க பொருட்களை தேர்வு செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ளதால், காதலர் தினத்தை கொண்டாட அங்கு ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கன்னியாகுமரி கடற்கரை, சொத்தவிளை பீச், குளச்சல் பீச், வட்டவிளை, மாத்தூர் தொட்டில் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நாைள கூட்டம் அதிகமாக வரக்கூடும் என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் காதலர் தின நாளில் சுற்றுலா தலங்களுக்கு வருவோர் எல்லை மீறிய செயல்களில் ஈடுபடக்கூடாது. யாராவது அத்துமீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.