களியக்காவிளை அருகே டாஸ்மாக் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
- சர்க்கரை மாத்திரையை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்ப டுகிறது.
- களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் தோமஸ் இவர் டாஸ்மார்க் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளன. பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. தோமஸ் அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர். இவர் மது அருந்தி விட்டு சரிவர வேலைக்கு செல்வதில்லை என்று கூறப்படுகிறது. இவருக்கு சர்க்கரை நோய் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று தோமஸ் அதிகமாக மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து தனது அறையில் சென்று கதவை பூட்டி உள்ளார்.நீண்ட நேரமாகியும் தோமஸ் அறையை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த மனைவி அறை கதவை திறந்து பார்த்த போது தோமஸ் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். தோமஸ் சர்க்கரை மாத்திரையை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்ப டுகிறது. மனைவி சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் தோமஸை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் இறந்தார்.
இது குறித்து களியக்கா விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.