தனியார் நிறுவனம் ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்
- குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
- சேவை குறைபாடு எதிரொலி
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் புல்லுவிளையை சேர்ந்தவர் செல்வகீதா. இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ.1000 வீதம் 64 மாதங்கள் கட்டினால் முடிவில் ரூ.94 ஆயிரம் கிடைக்கும் என்ற திட்டத்தில் சேர்ந்திருந்தார்.
அவர் தவணை தொகையை முழுவதும் செலுத்தி விட்டு முதிர்வு தொகையான ரூ.94 ஆயிரத்தை நிறுவனத்திடம் கேட்டார். உடனடியாக அந்த நிறுவனத்தினர் ரூ.94 ஆயிரத்திற்கு காசோலை வழங்கி உள்ளனர். ஆனால் அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கு செயல்பாட்டில் இல்லாததால் இந்த காசோலை மூலம் அவரால் பணம் பெற முடியவில்லை.
இதனால் பாதிப்படைந்த செல்வகீதா வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனினும் முறையான உரிய பதில் கிடைக்காததால் அவர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடாக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் மற்றும் முதிர்வு தொகை ரூ.94 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.