பெண்கள் இருக்கும் இடத்தில் சிறப்பு அதிகமாக இருக்கும்
- கிருஷ்ணா மாளிகா அரங்கம் திறப்பு விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
- குமரி மாவட்டத்தில் பொது மக்களின் நலன் கருதி விமான நிலையம் அமைக்க அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறினார்.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் அருகே கோட்டகம் ஸ்ரீ கிருஷ்ணா அறக்கட்டளையால் நவீன முறையில் ஏசி வசதிகளுடன் கூடிய புதிதாக கட்டப்பட்டு இருக்கும் பிருந்தாவனம் ஸ்ரீ கிருஷ்ண மாளிகா அரங்கத்தினை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு பேராசிரியை முனைவர் ஸ்ரீஜா ஸ்டாலின் குத்து விளக்கு ஏற்றினார். சென்னை நேசம் டெக் உரிமையாளர் மோகனகுமார், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலய தலைவர் கோட்டகம் விஜயகுமார் தலைமை உரையாற்றினார்.
முன்னதாக கோட்டகம் ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-
குமரி மாவட்டத்தில் பொது மக்களின் நலன் கருதி விமான நிலையம் அமைக்க அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். கிருஷ்ண பகவான் அன்று கூறிய உபதேசங்கள், இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பாடமாக மாணவர்கள் படித்து வருகின்றனர். நமது நாட்டிற்கு எத்தனை பிரச்சனைகள் எத்தனை நெருக்கடிகள், அதையெல்லாம் பிரதமர் மோடி அரசு முறியடித்து வெற்றிக்கொடி நாட்டி வருகின்றது,
அதேபோல குமரி மண்ணும் பல பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. எங்கு பெண்கள் அதிகமாக இருக்கிறார்களோ அங்கே சிறப்பு அதிகமாக இருக்கும், கோவில்களின் அருகாமையில் அனைத்து பகுதிகளிலும் மண்டபங்கள் கட்ட வேண்டும், அப்போதுதான் திருமணம் நடைபெற்ற பின்னர் இறைவனை அருகாமையில் தரிசிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள், துறவிகள், மடாதிபதிகள், அரசியல் பிரமுகர்கள், இந்து இயக்க தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.