கடல் சீற்றத்தில் சிக்கி படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த 18 மீனவர்கள் மீட்பு
- சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த ஆலன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 18 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
- படகு கடல் சீற்றத்தில் சிக்கி பழுதடைந்தது. இதனால் அவர்கள் படகை தொடர்ந்து ஓட்ட முடியாமல் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன் பிடித்துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு 350- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த துறைமுகத்தில் இருந்து சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த ஆலன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 18 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் நடுக்கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது படகு கடல் சீற்றத்தில் சிக்கி பழுதடைந்தது. இதனால் அவர்கள் படகை தொடர்ந்து ஓட்ட முடியாமல் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் நடுக் கடலில் வீசிய பயங்கர சூறாவளிகாற்றில் இவர் களது விசைப்படகு சிக்கி 22 நாட்டிக்கல் மைல் தொலைவில் தென்கிழக்கு திசையை நோக்கி படகு அடித்து செல்லப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து இன்னொரு விசைப்படகில் மீனவர்கள் விரைந்து சென்று நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 18 மீனவர்ளையும் அவர்களது விசைப் படகையும் மீட்டு கரைக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தனர்.