உள்ளூர் செய்திகள்

அரசு அதிகாரி உள்பட 2 பேருக்கு ஓராண்டு ஜெயில்

Published On 2023-06-29 09:59 GMT   |   Update On 2023-06-29 09:59 GMT
  • போலி ஆவணங்கள்-பொருட்களை மாற்றி செய்து மோசடி
  • குமரி மாவட்ட முதன்மை கோர்ட்டு தீர்ப்பு

நாகர்கோவில், ஜூன்.29-

கன்னியாகுமரி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை அலுவலராக முன்பு பணியாற்றியவர் ஜோதீந்தர் கீத் பிரகாஷ். கோவில்பட்டி தச்சு மற்றும் கொல்லு தொழிலாளர் குடிசை தொழில்கள் கூட்டுறவு சங்க முன்னாள் துணைத்தலைவர் கணேசன். பணம் மோசடி

இவர்கள் கடந்த 2005-06-ம் ஆண்டில் குமரி மாவட்டம், கலிங்கராஜபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளிக்கு மரசாமான்கள் அனுப்பியதில் முறைகேடு ஏற்படுத்தியதாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஜோதீந்தர் கீத் பிரகாஷ் மற்றும் கணேசன் ஆகியோர் கூட்டு சதி செய்து, கலிங்கராஜபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளிக்கு தேக்கு மரத்தால் மேஜை, நாற்காலிகள் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 725-க்கு செய்ததாக போலியான ஆவணம் தயார் செய்துள்ளது தெரியவந்தது. மேலும் மேஜை, நாற்காலிகள் தேக்கு மரத்தால் செய்வற்கு பதிலாக வேப்பமரம் பிளைவுட்டினால் செய்துள்ளதும், இதன்மூலம் அரசுக்கு ரூ.90 ஆயிரத்து 65 நிதி இழப்பு ஏற்படுத்தி பணம் கையாடல் செய்துள்ளதும் தெரியவந்தது.

இது தொடர்பாக 2 பேர் மீதும் கன்னியாகுமரி மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தனி நீதிபதி கோகுலகிருஷ்ணன் வழக்கை விசாரித்து, ஜோதீந்தர் கீத் பிரகாஷ், கணேசன் ஆகியோருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டைனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராதம் கட்ட தவறினால் 2 மாதங்கள் சாதாரண சிறைதண்டையும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜென்ஸி ஆஜரானார்.

ஜோதீந்தர் கீத் பிரகாஷ் கடந்த 2006-ம் ஆண்டு பணியில் இருந்தபோது தனக்கு கீழ் பணியாற்றிய ஆதிதிராவிட மாணவர் விடுதி சமையல்காரரிடம் பணி மாறுதலுக்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில், 3 வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News