மணவாளக்குறிச்சியில் மினி டெம்போவில் கடத்திய 2000 லிட்டர் மண்எண்ணை பறிமுதல்
- பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணை உணவு பிரிவு தடுப்பு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
- வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட உணவுப் பிரிவு தடுப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகதாம்பாள் தலைமை யிலான போலீசார் மண வாளக்குறிச்சி வள்ளியாற்று பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த மினி டெம்போ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது டிரைவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.
போலீசார் வண்டியை சோதனை செய்தபோது அதில் எந்த ஒரு ஆவணமும் இன்றி மண்எண்ணை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கேன்களில் இருந்த 2000 லிட்டர் மண்எண்ணையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் தக்கலை பகுதியை சேர்ந்த ஜெகன் ராஜ் (வயது 27) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணை உணவு பிரிவு தடுப்பு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
கைது செய்யப்பட்ட ஜெகன்ராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மண்எண்ணையை முட்டத்திலிருந்து கொட்டில்பாட்டிற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொட்டில்பாட்டை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு மண்எண்ணை கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் கண்ணன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.