கலைஞர் உரிமை திட்டத்தில் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
- முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு பணம் வழங்க திட்டம்
- குமரி மாவட்டத்தில்கள ஆய்வு
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் 784 ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்பட்டது. 4 லட்சத்து 19 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் விண்ணப்ப படிவுகளை பூர்த்தி செய்து வழங்கி உள்ளார்கள். ஒரு லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்திசெய்து வழங்கவில்லை.
பூர்த்தி செய்து வழங்கப்பட்ட 4 லட்சத்து 19 ஆயிரம் விண்ணப்ப படிவங்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஒரு சில விண்ணப்ப படிவங்களில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த விண்ணப்ப படிவங்களை நேரில் சென்று ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 70,000 விண்ணப்பங்களும் 2-வது கட்டமாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் என 2 லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பங்களை கள ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. அதிகாரிகள் நேரடியாக வீட்டிற்கு சென்று கள ஆய்வு பணியை மேற்கொண்டனர்.
தற்பொழுது கள ஆய்வு பணி நிறைவடைந்து உள்ளது. கள ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் விண்ணப்ப படிவத்தில் தெரிவித்துள்ள தகவல்கள் அனைத்தும் உண்மைதானா என்பது குறித்த விவரங்களை கேட்டு அறிந்தனர்.
இதன் அடிப்படையில் தற்போது 20,000 விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள ஒரு லட்சத்து 90 ஆயிரம் விண்ணப்ப படிவங்களையும் மீண்டும் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே சென்னையில் 2 லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் முதற்கட்டமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த விண்ணப்ப படிவங்களை மின் ஆளுமை மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அதில் 12,000 விண்ணப்ப படிவங்களுக்கு வங்கிக்கணக்கில் சில குறைபாடுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 12,000 விண்ணப்ப படிவங்களையும் சம்மந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பி உடனடியாக அந்த வங்கி கணக்கில் உள்ள குறைபாடு களை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில் தபால் நிலையத்தில் 12 ஆயிரம் பேருக்கு வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது. கலைஞர் உரிமை திட்டத்திற்கான பணம் ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சி வருகிற 15-ந்தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் திருவட்டார் அல்லது கல்குளம் தாலுகாக்களில் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அன்று பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும் என்று தெரிகிறது. முதல் கட்டமாக குமரி மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு கலைஞர் உரிமை திட்டத்திற்கான பணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஒரு வார காலத்திற்குள் தகுதியான அனைவருக்கும் கலைஞர் உரிமை திட்டத்திற்கான பணம் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.