உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

தக்கலையில் இன்று அதிகாலை நகை பறிப்பு திருடர்கள் 3 பேர் கைது

Published On 2022-10-17 07:17 GMT   |   Update On 2022-10-17 07:17 GMT
  • போலீசாரின் வாகன சோதனையில் சிக்கினர்
  • அவர்களிடமிருந்து 17 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

அதிலும் குறிப்பாக தககலை, நித்திரவிளை, கொற்றிகோடு, களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடவும் அவர் அறிவுறுத்தினார். மேலும் தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் தனிப்படை அமைத்தும் உத்தரவிட்டார்.

இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களிலும் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வாகன நோதனையும் நடத்தி வருகின்றனர்.

இன்று அதிகாலை அழகியமண்டபம் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதில் 3 பேர் இருந்தனர்.

அவர்கள், போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாகச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தனிப்படையினர், மோட்டார் சைக்கிளை விரட்டிச் சென்றனர். சுமார் 1 கி.மீட்டர் தூரத்திற்கு விரட்டிச் சென்ற போலீ சார், வெள்ளிகோடு என்ற இடத்தில் 3 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.

அவர்களை விசாரித்த போது, 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனைத் தொடர்ந்து அவர்களை தக்கலை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது 3 பேரும் பல்வேறு பகுதிகளிலும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என தெரிய வந்தது.

இவர்கள், நித்திரவிளை, கொற்றிகோடு, களியக்காவிளை பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு உள்ளனர். அதன் அடிப்படையில் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் தட்டாமலையைச் சேர்ந்த மாஹின் (வயது 21), வடக்காவிளை செய்யது அலி (23), முளவன பர்ஜாஸ் (20) என தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 17 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

Tags:    

Similar News