முந்திரி வியாபாரம் தொடர்பாக மோசடியில் ஈடுபட்ட மேலும் 3 பேர் தலைமறைவு
- குறைவான விலையில் முந்திரிகள் அனுப்பி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார்.
- பல தவணைகளாக ரூ.64.74 லட்சம் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.
மார்த்தாண்டம் :
கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவர் தொழில் சம்பந்தமான வங்கி கணக்கு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வைத்துள்ளார். அப்போது உதவி மேலாளராக பணிபுரியும் ஜெயா கிறிஸ்ட் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. இவர் ஆப்பிரிக்காவில் முந்திரி வியாபாரம் செய்யும் கன்னியாகுமரி சர்ச் ரோடு பகுதியை சேர்ந்த ஆஸ்டின்ராய் என்ற ராய் பெர்ணான்டோ (65) என்பவரை அறிமுகம் செய்துவைத்துள்ளார். அவர் ஆப்பிரிக்காவில் வியாபாரம் செய்து வருவதாகவும் தமிழ்நாட்டை விட அங்கு விலை குறைவாக கிடைக்கும் என்று கூறி உங்களுக்கும் குறைவான விலையில் முந்திரிகள் அனுப்பி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார்.
இதனை நம்பி பல தவணைகளாக ரூ.64.74 லட்சம் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் பணத்தை வாங்கி விட்டு முந்திரி அனுப்பி வைக்காமல் மோசடி செய்துள்ளார். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.
இந்த தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்டின் ராய் என்பவரை தேடி வந்தனர். ஆனால் ஆஸ்டின் ராய் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். அவர் எப்போது வந்தாலும் கைது செய்வதற்காக ஆஸ்டின் ராய் தொடர்பான விபரங்களையும் அவரது புகைப்படத்தையும் திருவனந்தபுரம், சென்னை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு குற்றப்பிரிவு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ஆஸ்டின் ராய் நேற்று வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியபோது ஆஸ்டின் ராய் போலீசாரால் தேடப்பட்டு வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உடனே விமான நிலைய அதிகாரிகள் குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் அடிப்படையில் சென்னைக்கு சென்று அவரை கைது செய்து நாகர்கோவில் அழைத்து வந்தனர். ஆஸ்டின் ராயிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆஸ்டின் ராய் மனைவி மேக்லின் ராய், அவரது மகன் டான் ரினால்டா ராய், வங்கி உதவி மேலாளர் ஜெயா கிறிஸ்ட் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.