சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 300 விசைப்படகுகள்
- மீன்வளத்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி சென்றனர்
- மீன்வளத்துறை அதிகாரிகள், விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில மீன்பிடி துறைமுகம் உள்ளது.
இந்த துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழையின் காரணமாக கடலுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறையினர் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களுக்கு மேலாக சின்னமுட்டம் மீன்பிடிதுறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடிதொழிலில் ஈடுபட்டு வரும் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இந்த படகுகள் அனைத்தும் சின்னமுட்டம் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் விசைப்படகு மீனவர்கள் தங்களை மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று நேற்று இரவு சின்னமுட்டம் மீன்வளத்துறை அலுவல கத்தை முற்றுகை யிட்டனர். இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் மீன்வளத்துறை அதிகாரி களின் கட்டுப்பாட்டு மீறி சின்னமுட்டம் துறைமுகத்திலிருந்து இன்று அதிகாலை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.