உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் 11 நாட்கள் நடந்த புத்தக திருவிழாவில் ரூ.50 லட்சம் புத்தகங்கள் விற்பனை - குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

Published On 2023-04-25 09:04 GMT   |   Update On 2023-04-25 09:04 GMT
  • பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே அறிவுசார்ந்த புத்தகம் வாசிக்கும் பழக்கம்
  • இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதே ஆகும்.

நாகர்கோவில் :

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்திய புத்தகத் திருவிழா நிறைவுநாள் நிகழ்ச்சி கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே அறிவுசார்ந்த புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக்கொள்ளும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் அதற்கென நிதி ஒதுக்கீடு செய்து, புத்தகத்திருவிழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி தொடங்கிய புத்தக திருவிழா நேற்று வரை தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. ஒவ்வொரு நாளும் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புத்தக அரங்குகளை பார்வை யிட்டதோடு, தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் வாங்கி பயனடைந்துள்ளனர்.

வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பள்ளிக்கல்வித்துறையில் எண்ணும், எழுத்தும் மற்றும் இல்லம் தேடி கல்வித்திட்டம், சமூகநலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுசுகாதாரத்துறை, காவல்துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் இந்த புத்தகக் கண்காட்சியின் முக்கிய நோக்கம் நமது சமுதாயத்தை குறிப்பாக, குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதே ஆகும். புத்தகம் வாசிப்பானது நம்முடைய தனிப்பட்ட வளர்ச்சியில் ஒரு பெரிய பங்கு வகிப்பதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை புத்தகம் வாசிப்பதில் ஊக்குவிக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் மாணவ-மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மாவட்ட மைய நூலகம் பல்லாயிரக்கணக்கான அறிவுசார்ந்த நூலகங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. அதை போல் கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளில் 21 கிளை நூலகங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் கிராமப்புறங்களில் மொத்தம் 109 கிராமபுற நூலகங்கள் செயல்பட்டு வருகிறது.

தற்போதைய தொழில்நுட்பவியல் காலத்தில் மாவட்ட மைய நூலகங்கள் டிஜிட்டல் மையமாக மாற்றும் திட்டம் கொண்டுவரப்பட்டு, மாவட்ட மைய நூலகம் முழுமை யாக கணினி மயமாக்கப்பட் டுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் நூலகங்கள் மற்றும் வாசிப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு ஆண்டும் நூலகங்களை புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இளைய தலை முறையினர், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிவு சார்ந்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டு வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசினையும், வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட சிறந்த படைப்பாளிகள் மற்றும் நன்கொடை வழங்கியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்புகழேந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, தாசில்தார்கள்ராஜேஷ் (அகஸ்தீஸ்வரம்), வினை தீர்த்தான் (தோவாளை), தனிவட்டாட்சியர் கோலப்பன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News