குளச்சலில் 8 மாத கர்ப்பிணி பெண் திடீர் சாவு - ஆர்.டி.ஓ. விசாரணை
- தீவிர சிகிச்சை பெற்று வந்த ஆயிசா சுமையா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
- கர்ப்பிணி பெண் திடீரென இறந்த சம்பவம் குளச்சலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குளச்சல் :
குளச்சல் மேலத்தெருவை சேர்ந்தவர் சம்மீல் கான் (வயது 32).இவர் குளச்சல் காந்தி சந்திப்பில் கம்ப்யூட்டர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆயிசா சுமையா (26). இவருக்கு முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. பின்னர் 2-வது முறை கர்ப்பமடைந்த ஆயிசா சுமையாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் அவர் 3-வது முறையாக கர்ப்பமடைந்து 8 மாத கர்ப்பிணியானார். வீட்டிலிருந்த ஆயிசா சுமையா நேற்று திடீரென வாந்தி எடுத்தார். வீட்டினர் உடனே அவரை நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஆயிசா சுமையா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆயிசா சுமையாவின் தாயார் நாகர்கோவில் கீழசரக்கல் விளையை சேர்ந்த சகர்பானு குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டி.எஸ்.பி. (பொறுப்பு) சந்திரசேகரன் விசாரணை நடத்தி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது. கர்ப்பிணி பெண் திடீரென இறந்த சம்பவம் குளச்சலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.