நாகர்கோவிலில் தொழில் அதிபரை லாட்ஜில் வைத்து சித்ரவதை செய்த 9 பேர் கைது
- பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது
- புகாரில் தன்னை சிறை வைத்து தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
நாகர்கோவில் :
கடியப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 55).
இவர், நாகர்கோவில் அருகே இறச்சகுளத்தில் உணவுப்பொருள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். தனது நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளுக்கு காய்கறி மீன் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்து வருகிறார். இவருக்கும் மதுரை மேலூரைச் சேர்ந்த சக்திவேல் (52) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. ஜெயபால் பணம் கொடுக்காததையடுத்து சக்திவேல் தனது நண்பர்களுடன் மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்தார்.
நாகர்கோவிலில் தனது நண்பர்கள் உதவியுடன் ஜெயபாலை தேடினார். அப்போது ஜெயபால் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள லாட்ஜுல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சக்திவேல் தனது நண்பர்களுடன் அந்த லாட்ஜுக்கு சென்றார். அங்கு அறையில் இருந்த ஜெயபாலுக்கும் சக்திவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயபால், சக்திவேல் மற்றும் அவருடன் வந்த வர்களை பிடித்தனர். பிடிபட்ட அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப் போது சக்திவேல் தனக்கு ஜெயபால் பணம் தர வேண்டும் என்றும் அவர் நீண்ட நாட்களாக பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் இரு தரப்பினரையும் வட சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஜெயபால் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரில் தன்னை சிறை வைத்து தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல் மற்றும் மதுரை மேலூரை சேர்ந்த சுரேஷ் (33), ஜாபர் அலி (35), ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விவேக் (26), பள்ளி விளையைச் சேர்ந்த ஜான் (26), மதுரை மேலூரைச் சேர்ந்த கார்த்திக் (38), நாகர்கோவில் புது குடியிருப்பைச் சேர்ந்த அனீஸ் (28), ராணித் தோட்டம் வடக்கு தெருவை சேர்ந்த பிரபாகர் (33) கார்த்திக் (29) ஆகிய 9 பேர் மீதும் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 9 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.