கன்னியாகுமரியில் லாட்ஜ் "லிப்ட்"டில் 1 மணி நேரம் சிக்கி தவித்த 9 வடநாட்டு சுற்றுலா பயணிகள்
- தீயணைக்கும் படை வீரர்கள் மீட்டனர்
- 4 நபர்கள் மட்டும் செல்லக்கூடிய அந்த லிப்டில் அதிகப்படியாக 9 நபர்கள் ஏறி மேல் மாடிக்கு சென்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி வடக்குத் தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்த வட மாநில சுற்றுலா பயணிகள் 9 பேர் இன்று அதிகாலை சூரியன் உதயமாகும் காட்சியைக் காண கன்னியாகுமரி கடற்கரைக்கு சென்றனர்.
அவர்கள் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்து விட்டு காலை 6.30 மணிக்கு அவர்கள் தங்கி இருக்கும் லாட்ஜுக்கு திரும்பி வந்தனர். இந்த லாட்ஜில் 4 நபர்கள் மட்டும் செல்லக்கூடிய "லிப்ட்" அமைக்கப்பட்டு இருந்த நிலையில் அதிகப்படியாக 9 நபர்கள் அந்த லிப்டில் ஏறி மேல் மாடிக்கு சென்றனர்.அப்போது"லிப்ட்" பழுதாகி பாதிவழியில் நின்றது.
இதனால் அவர்கள் 9 பேரும் அந்த லிப்டில் சுற்றி தவித்துக் கொண்டிருந்தனர். இது பற்றி தகவல் அறிந்த லாட்ஜ் ஊழியர்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அதிகாரி ஆரோக்கியதாஸ் தலைமையில் தீயனைக்கும் படை வீரர்கள் அந்த லாட்ஜுக்கு விரைந்து வந்தனர்.
தீயணைக்கும் படை வீரர்கள் மீட்பு கருவி மூலம் லிப்டில் சிக்கி இருந்த 9 வடமாநில சுற்றுலா பயணிகளை சுமார் 1 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.