கன்னியாகுமரியில் நள்ளிரவில் நடுரோட்டில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபர்
- போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து கோவளம் செல்லும் புதிய பஸ் நிலைய ரோட்டில் சிலுவை நகர் அருகே டாஸ்மாக் அரசு மது கடை பக்கம் நடுரோட்டில் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அவருக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கவிழ்ந்து கிடந்தது. அப்போது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில்1.45 மணிக்கு அந்த வழியாக வந்த யாரோ சில நபர்கள் பார்த்து இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் பேரில் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர் பரமக்குடியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 27) என்பது தெரிய வந்தது. அவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தாரா? அல்லது வேறு ஏதாவது வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தாரா? அல்லது யாராவது சமூக விரோத கும்பல் அவரை தாக்கியதில் படுகாயம் அடைந்தாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.