ஆசாரிபள்ளம் அருகே வியாபாரிக்கு சரமாரி கத்திக்குத்து
- மணல் குடோனில் சிறுநீர் கழித்ததை, சத்தியாகு கண்டித்துள்ளார்.
- ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கீழ ஆசாரிபள்ளம் சானல் கரையை சேர்ந்தவர் சத்தியாகு (வயது 61). இவர் சாக்கு வியாபாரம் செய்து வருகிறார்.
சத்தியாகு நேற்று மேல ஆசாரிபள்ளத்தில் மணல் குடோன் ஒன்றுக்கு சென்றார். அப்போது அங்கு அதேபகுதியை சேர்ந்த மர ஆசாரி சேவியர் (55) வந்துள்ளார். அவர், மணல் குடோனில் சிறுநீர் கழித்ததை, சத்தியாகு கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சேவியர், தான் வைத்திருந்த உளியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், சத்தியாகுவுக்கு தலை, மார்பு மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.
அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் திரண்டதால், சேவியர் அங்கிருந்து ஓட்டம் எடுத்தார். அப்போது ஆசாரிபள்ளத்தை சேர்ந்த அருள்சேவியர் (47) என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரது வாகனத்தில் ஏறி சேவியர் தப்பிச்சென்று விட்டார்.
காயம் அடைந்த சத்தி யாகு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்ற னர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.