தக்கலையில் திருட்டு வழக்கில் 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
- வீடு புகுந்து கொள்ளை அடிக்க கும்பலாக திட்டம் தீட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
- போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து வழக்கை விசாரித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
தக்கலை :
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் சுடலைகண்ணு (வயது 58), கட்டிட தொழிலாளியான இவர் சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு தக்கலையில் வீடு புகுந்து கொள்ளை அடிக்க கும்பலாக திட்டம் தீட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
அதன் பின்பு வழக்குக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் சென்னையில் தலைமறைவாக குடும்பத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்துபாண்டியன் தலைமையில் தக்கலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தார். அவரை போலீசார் விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தக்கலை போலீசாரால் தேடப்பட்டவர் என தெரியவந்தது. உடனே அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து வழக்கை விசாரித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.