தெங்கம்புதூரில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ.1 லட்சம் பணம் கொள்ளை
- சி.சி.டி.வி. கொள்ளையர்கள் உருவம் சிக்கியது
- கொள்ளையர்களை பிடிக்க 2 தனி படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது
கன்னியாகுமரி :
தெங்கம்புதூர் சாஸ்தான் கோவில்விளை பகுதியை சேர்ந்தவர் தானு. இவரது மகன் சரவண முருகன் (வயது 61). இவர் நெல்லை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்பொழுது சரவண முருகன் தியாகராஜநகர் பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வருகிறார்.
கடந்த ஆண்டு மே மாதம் தானு இறந்துவிட்டார். இதையடுத்து சொந்த ஊரான தெங்கம்புதூர் சாத்தான்கோவில்விளையில் கல்லறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதை பார்ப்பதற்காக சரவண முருகன் ஊருக்கு வந்திருந்தார்.
இங்குள்ள வீட்டில் சரவண முருகன் இருந்தார். அப்போது வீட்டின் பின் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து அவரது பேக்கில் இருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் அவரது பர்சில் இருந்த 4,500 பணத்தையும், ஏ.டி.எம். கார்டு, பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை திருடி சென்றனர். மேலும் வீட்டில் இருந்த குத்துவிளக்கையும் எடுத்துச்சென்று விட்டனர்.
குளித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது பேக்கில் இருந்த பணம் திருடப்பட்டிருப்பதை பார்த்து சரவணமுருகன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சரவண முருகன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்கள் 3 பேர் சரவண முருகன் வீட்டிற்குள் செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அந்த காட்சிகளை வைத்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 2 தனி படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பணம் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.