உள்ளூர் செய்திகள்

குமரி பழத்தோட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த விஷப்பாம்பு

Published On 2023-09-07 07:18 GMT   |   Update On 2023-09-07 07:18 GMT
  • தீயணைக்கும் படையினர் மீட்டு வனத்துறையினரிட ம் ஒப்படைத்தனர்
  • பாம்பு சுமார் 6 அடி நீளம் கொண்டதாக இருந்தது

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி அருகே உள்ள அஞ்சுகிராமம் விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் சந்தீபன் (வயது 23). இவர் சுற்றுலா வேன் டிரைவர் ஆவார். இவர் தனது மனைவியுடன் நேற்று மாலை கன்னியாகுமரிக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா வந்திருந்தார். இவர் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா இடங்களை சுற்றி பார்த்துவிட்டு அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவை பார்வையிட வந்தார். அங்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சுற்றுச்சூழல் பூங்காவை பார்வையிட சென்றார்.

பூங்காவை பார்வையிட்டு விட்டு திரும்பி வந்து தனது இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றார். அப்போது வாகனத்துக்குள் கொடிய விஷப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை பார்த்து அலறினார். உடனே அவர் இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி, நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருசக்கர வாகனத்திற்குள் பதுங்கி இருந்த கண்ணாடி வீரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர்.

அந்த பாம்பு சுமார் 6 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் அவர்கள் அந்த பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த விஷப்பாம்பை பாதுகாப்பான அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Tags:    

Similar News