குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் விநியோகத்தை முறைபடுத்தி வழங்க வேண்டும்
- ஊராட்சி தலைவர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
- நீரினால் பரவும் நோய்களை தடுக்க குடிநீரில் குளோரின் கலப்பது அத்தியாவசியமாகிறது
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி தலை வர்களுடனான மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப்பெறுப்பேற்ற 2 ஆண்டுகளில் தமிழ் நாட்டுக்குட்பட்ட அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் சுத்தமான குடிநீர் விநியோகம், தனிநபர் கழிப்பறை, ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் வாயிலாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பேசப்பட்டது.
மேலும் இணையதளம் மூலமாக அனைத்து வீடுகளிலும் வரி வசூல் செய்யும் பொருட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து விவரங்களும் 100 சதவீதம் இலக்கை எட்டப்பட்டதா என்பதை துறை அலுவலர்கள் உறுதிபடுத்திட வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் ஆதாரத்திற்கேற்ப, குடிநீர் விநியோகத்தை முறைபடுத்தி வழங்க வேண்டும்.
ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் பிற திட்டங்களின் கீழ் நீராதாரங்களை உருவாக்கி வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து ஊராட்சிகளும் இல்லந்தோறும் குடிநீர் என்ற தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக அறிவித்திட நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட வேண்டும்.
தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீரின் அளவை கண்காணிக்க இவ்வாரியத்தின் மூலம் நீரேற்றம் செய்யப்படும் மேல்நிலை தொட்டிகள் அனைத்திலும் நீரோட்ட கருவி பொருத்தப்பட வேண்டும். பதிவேடுகளில் தினந்தோறும் வழங்கப்படும் நீரின் அளவு பதியப்பட வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீருக்கான கேட்புகளுக்கு இதனை சரிபார்த்து தொகை செலுத்தப்பட வேண்டும்.
நீரினால் பரவும் நோய்களை தடுக்க குடிநீரில் குளோரின் கலப்பது அத்தியாவசியமாகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குளோரி னேசன் செய்வதை எளிதாக்கும் பொருட்டு அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலும் குளோரின் கலப்பான பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீரின் தரத்தினை சரிபார்க்கும் பொருட்டு பயிற்சி அளிக்க ப்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம் ஒப்படைத்து குடிநீரின் தரம் சரிபார்க்கப்பட்ட விவரங்கள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டுமென்பதோடு, கன்னியாகுமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வருகை தந்துள்ள அனைத்து ஊராட்சி மன்றத்தலை வர்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திட்ட இயக்குநர்கள் பாபு (ஊரக வளர்ச்சி முகமை), இலக்குவன் (மகளிர் திட்டம்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி உட்பட துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.