தெங்கம்புதூர் பகுதியில் புத்தன் அணை குடிநீர் திட்டத்திற்கு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு - மேயர் மகேஷ் தகவல்
- போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
- 65 இடங்களில் மாநகர பகுதியில் நோ பார்க்கிங் போர்டு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநக ராட்சியில் வியாழக்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. குறிப்பாக வீட்டு வரி தொடர்பாக அதிக அளவு மனுக்கள் வந்திருந்தது. அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மேயர் மகேஷ் உத்தர விட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஏற்கனவே ஒரு சில சாலைகள் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் வடசேரியில் இருந்து மணிமேடை வரை உள்ள சாலையை இருவழிப்பாதையாக மாற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.
அதற்கான அளவீடு பணி நடந்து வருகிறது. போக்குவரத்து போலீசார் நோ பார்க்கிங் போர்டு வைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். 65 இடங்களில் மாநகர பகுதியில் நோ பார்க்கிங் போர்டு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கான போர்டு மாநகராட்சி சார்பில் தயார் செய்யப்பட்டு போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்படும்.
புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. தற்பொழுது வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். முதல் கட்டமாக 40 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்ததற்காக மீட்டர் வந்துள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு முடிக்கப்படும். புத்தன் அணை குடிநீர் திட்டத்தை தெங்கம்புதூர் பகுதியில் செயல்படுத்த ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். நாகர்கோவில் மாநகர பகுதியில் குடிநீர் பிரச்சி னையை சமாளிப்பதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புத்தன் அணையில் இருந்து பரிசோதனைக்கு வரக்கூடிய 22 மில்லியன் லிட்டர் தண்ணீரை கிருஷ்ணன் கோவில் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பொது மக்களுக்கு சப்ளை செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். அதை பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் பட்சத்தில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பொறியாளர் பாலசுப்பிரமணியன், நகர்நல அதிகாரி ராம் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.