உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் இன்று 50 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள் வெளிநாடு-வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து பங்கேற்றனர்

Published On 2022-12-26 09:36 GMT   |   Update On 2022-12-26 09:36 GMT
  • 1972-ம் ஆண்டு முதல் 1978-ம் ஆண்டு வரை ஏ வகுப்பில் படித்த முன்னாள் மாணவர்கள் இன்று ஒன்று கூடும் நிகழ்வு நடந்தது.
  • தாங்கள் படித்த பள்ளிக்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு வந்தவர்கள் பள்ளியில் தாங்கள் படித்த வகுப்பறை மற்றும் தங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்களில் சிலரையும் அழைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

நாகர்கோவில் :

நாகர்கோவிலில் உள்ள கார்மல் மேல் நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிறது.

இப்பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ள நிலையில் இப்பள்ளியில் கடந்த 1972-ம் ஆண்டு முதல் 1978-ம் ஆண்டு வரை ஏ வகுப்பில் படித்த முன்னாள் மாணவர்கள் இன்று ஒன்று கூடும் நிகழ்வு நடந்தது.

இதில் ஒரே வகுப்பில் படித்த சுமார் 35 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் பலர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் தங்கி இருந்தனர்.

இவர்களில் சிலர் வாட்ஸ் அப் குரூப் மூலம் ஒன்றிணைந்தனர். கார்மல் மேல் நிலைப்பள்ளியில் படித்து முடித்து பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த இவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே பள்ளியில் ஒன்று சேர முடிவு செய்தனர்.

இதையடுத்து இன்று காலை அவர்கள் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் ஒன்று கூடினர். அவர்களில் சிலர் தங்கள் குடும்பத்தினரையும் அழைத்து வந்திருந்தனர்.

தாங்கள் படித்த பள்ளிக்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு வந்தவர்கள் பள்ளியில் தாங்கள் படித்த வகுப்பறை மற்றும் தங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்களில் சிலரையும் அழைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்பணி மரிய பாஸ்டின் துரை, அருட்பணி ஏசுநேசன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது படிக்கும் போது நடந்த பல்வேறு சுவையான சம்பவங்களை பலரும் பகிர்ந்து கொண்டனர். இன்று ஒன்று கூடிய பலரும் சுமார் 60 வயதை எட்டியிருந்தனர். ஆனால் அவர்கள் பள்ளி பருவத்தை பற்றி பகிர்ந்து கொண்ட போது அவர்களின் கண்ணில் இளமையும், பூரிப்பும் தென்பட்டது. சிலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது கண்கலங்கினர்.

இன்றைய நிகழ்வுக்கு வந்தவர்களில் பலர் மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்தனர். இது தவிர மும்பை, பெங்களூரூ, திருவனந்தபுரம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்றனர்.

முன்னாள் மாணவர்கள் அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக் ெகாண்டனர். தொடர்ந்து தங்களது உறவுகளை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து மகிழ்ந்தனர். இது பற்றி முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற திருவனந்தபுரம் ஐ.எஸ்.ஆர்.ஓ. கூடுதல் இயக்குனருமான ஜெகன்லால் கூறுகையில், என்னுடன் படித்த பலரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களது பொன்விழா ஆண்டு.

தற்போது பணி ஓய்வு பெற்ற நாங்கள் இங்கு குடும்பத்துடன் வந்துள்ளோம். மாலையில் அனைவரும் சங்குத்துறை பீச் சென்று பேச்சு, கட்டுரை, பீச் வாக் போன்ற போட்டிகளில் பங்கேற்க உள்ளோம் என்றார்.

Tags:    

Similar News