சுசீந்திரம் அருகே கோவிலில் அம்மன் தாலி திருட்டு
- பூட்டு மர்ம வேதிப் பொருள் கொண்டு உடைக்கப்பட்டுள்ளது
- போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி:
சுசீந்திரம் ஆசிரமம் அருகே 18-ம் படி பழவூர் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 15 தினங்களக்கு முன்பாக திருவிழா நடைபெற்றது.
நேற்று பூசாரி இசக்கிவேல் பூஜை வைப்பதற்காக கோவில் நடையை திறக்க வந்தார். அப்போது கோவிலின்கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சுசீந்திரம் போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் விரைந்து வந்தனர்.
உடைக்கப்பட்ட பூட்டு இரும்பு தகவுகளை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது உடைக்கப்பட்ட பூட்டு மர்ம வேதிப் பொருள் கொண்டு உடைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. அந்த இடத்தில் கெமிக்கல் பொருட்கள் கீழே சிதறி கிடந்தது. அம்மனின் கழுத்தில் இருந்த தாலி மற்றும் பூஜைப் பொருட்கள், ரேடியோ, மின் அடுப்பு போன்ற பொருட்கள் திருட்டு போய் உள்ளது. இது குறித்து போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த பகுதியில் ரோந்து போலீசார் ரோந்து பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். அப்படி இருக்கும் போது திருட்டு நடந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வருடமும் கோவில் திருவிழா நடந்து முடிந்து 15-நாளில் இதே போல் 2 பவுன் நகை உள்பட பல பொருட்கள் திருட்டு போய் இருந்தன. ஆகையால் முதலில் செய்து குற்றவாளிகள் தான் இதையும் செய்து இருக்கலாம் என போலீசார் பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.