உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் சந்திப்பு நிலையம் வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க வேண்டும் : பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை

Published On 2022-06-08 07:29 GMT   |   Update On 2022-06-08 07:29 GMT
  • பயணிகள் டவுண் நிலையத்துக்கு செல்ல இணைப்பு ரெயிலோ, பஸ் வசதியோ இல்லை.
  • நாகர்கோவில் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்கிய பின், அனந்தபுரி ரெயிலை டவுன் நிலையம் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகர்கோவில்:

மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஸ்னவ்வுக்கு மற்றும் அதிகாரிகளுக்கு குமரி மாவட்ட ரெயில்வே பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி, நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக பல்லாயிரக்கணக்கான பயணிகள் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய ஊர்களுக்கு சென்று வருகின்றனர். அவர்கள் வசதிக்காக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மற்றும் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி ரெயிலில் டிக்கெட் கிடைக்காத பயணிகள், அனந்தபுரி ரெயிலில் சென்று வந்தனர். இந்த நிலையில் அனந்தபுரி ரெயிலை நாகர்கோவில் டவுண் நிலையம் வழியாக இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஆனால் பயணிகள் டவுண் நிலையத்துக்கு செல்ல இணைப்பு ரெயிலோ, பஸ் வசதியோ இல்லை. இதனால் பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து கார், ஆட்டோக்களில் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க வேண்டும். நாகர்கோவில் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்கிய பின், அனந்தபுரி ரெயிலை டவுன் நிலையம் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News