திங்கள் நகர் பேரூராட்சி கூட்டத்தில் வாக்குவாதம்
- கவுன்சிலர்கள் மீது தாக்குதல்
- கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
திங்கள் நகர் பேரூராட்சி யில் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடந்தது. இதற்கு பேரூராட்சி தலைவர் சுமன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை உள்ள வரவு செலவு மற்றும் தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
அவர்களுடன் மற்ற கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பா.ஜ.க. கவுன்சிலர் ஜெயசேகரன், காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் பீட்டர்தாஸ் ஆகியோர் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து ஜெயசேகரன் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக அனுமதிக்க பட்டார். இதுபோல காங்கிரஸ் கவுன்சிலர் ஜேக்கப் குளச்சல் மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார்.
இதற்கிடையே பா.ஜ.க. நிர்வாகிகள் பேரூராட்சி அலுவலகம் முன்பு கூடினர்.தகவல் அறிந்து போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதற்கிடையே கவுன்சிலர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக இரணியல் போலீஸ் சப்-இன்ஸ பெக்டர் பாலசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பதிவான வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.