உள்ளூர் செய்திகள்

மணவாளக்குறிச்சி அருகே வங்கி ஊழியர் மகனை கடத்த முயற்சி

Published On 2023-11-21 07:46 GMT   |   Update On 2023-11-21 07:46 GMT
  • மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு
  • பள்ளி சீருடையை மாற்றி விட்டு டியூசன் வகுப்புக்கு புறப்பட்டான்.

மணவாளக்குறிச்சி :

குமரி மாவட்டம் மண்டைக்காடுஅருகே உள்ள கூட்டுமங்கலத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் கணிணி பிரிவில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகன் அஷ்வந்த் (வயது 9). இவன் அந்தப்பகுதியில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். மாலையில் டியூசன் வகுப்புக்கும் சென்று வந்தான்.

நேற்று மாலை அஷ்வந்த், பள்ளியில் இருந்து வழக்கம்போல் வீடு திரும்பினான். பின்னர் அவன் பள்ளி சீருடையை மாற்றி விட்டு டியூசன் வகுப்புக்கு புறப்பட்டான். பஸ் நிலையம் பகுதிக்கு அஷ்வந்த் வந்த போது, 2 பேர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.

அவர்கள் நைசாக அஷ்வந்திடம் பேச்சுக் கொடுத்தனர். அப்போது பஸ் நிலைய பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனை பயன்படுத்தி 2 பேரும் திடீரென, அஷ்வந்த்தை மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்ல முயன்றனர். இதனை எதிர்பார்க்காத அவன், அவர்களது பிடியில் இருந்து தப்பிக்க முயன்றான். உடனே 2 பேரும் அஷ்வந்த் வாயில் துணியை (கர்சீப்) வைத்து அழுத்தி உள்ளனர்.

அந்த நேரத்தில் ஊர் மக்கள் அங்கு வந்ததால், மோட்டார் சைக்கிள் நபர்கள், அஷ்வந்தை விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர். டியூசன் சென்ற மாணவனை கடத்த முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மண்டைக்காடு போலீசில் சுரேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஷ்வந்த்தை கடத்த முயன்றது யார்? எதற்காக கடத்த முயன்றனர்? முன்விரோத செயலா? அல்லது பணம் பறிக்க முயற்சியா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News