கன்னியாகுமரி அருகே முட்டப்பதி கடலில் நள்ளிரவில் அய்யா வைகுண்டசாமி கலி வேட்டையாடிய நிகழ்ச்சி
- அய்யாவுக்குப் பணிவிடை, வாகன பவனி, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்னதா்மங்கள் நடைபெற்று வருகின்றன.
- வடக்கு வாசலுக்கு எதிரே உள்ள கடலில் கலிவேட்டையாடிய நிகழ்ச்சி
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்ட சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத 11 நாள் திருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் அய்யாவுக்குப் பணிவிடை, வாகன பவனி, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்னதா்மங்கள் நடைபெற்று வருகின்றன.
8-ம் நாள் திருவிழாவான நேற்று அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்குபணிவிடையும், உகப்படிப்பும் நடந்தது. 12 மணிக்கு உச்சிப்படிப்பும் பால்அன்ன தா்மமும் நடந்தது. இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்ட சாமி பல வண்ணமலா்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக புறப்பட்டு ஒற்றையால்விளை வழியாக மாதவபுரம் ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலை சென்றடைந்தது.
அங்கு மாதவபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் அய்யாவுக்கு சுருள் படைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் அய்யா எழுந்தருளி இருந்த குதிரை வாகனம் மீண்டும் அதே வழியாக முட்டப்பதி வரை பவனி வந்து வடக்கு வாசலுக்கு எதிரே உள்ள கடலில் கலிவேட்டையாடிய நிகழ்ச்சி நடந்தது.அதன்பிறகு இரவு 11 மணிக்கு அன்னதா்மம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 9 மற்றும் 10-ம் நாள் திருவிழாக்களில் இரவு 7.30 மணிக்கு அய்யா சப்பர வாகனத்தில் எழுந்தருளி பதியைச்சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ம் நாள் திருவிழாவான வருகிற 3-ந்தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் (4-ந்தேதி) அதிகாலை திருக்கொடி இறக்குதலும் அதைத்தொடா்ந்து தான தா்மங்களும் நடக்கிறது.திருவிழாவுக்கான ஏற்பாடுகளை முட்டப்பதி தலைமை தா்மகா்த்தா பாலசுந்தரம், தர்மகர்த்தா செல்வராஜ் ஆகியோா் செய்து வருகின்றனா்.