உள்ளூர் செய்திகள்

மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பாரதிய ஜனதா கட்சியினர் புகார் மனு - கண்டன பொதுக்கூட்டம் நடத்த போவதாகவும் அறிவிப்பு

Published On 2022-11-09 09:17 GMT   |   Update On 2022-11-09 09:17 GMT
  • கோட்டார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எம் .ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
  • மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்திருந்தனர்

நாகர்கோவில் :

நாகர்கோவில் செம்மங்குடி ரோட்டில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் மேயர் மகேஷ் பாரதிய ஜனதா கட்சியினரை விமர்சித்து பேசியதாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேயர் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோட்டார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எம் .ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நாகர்கோவில் மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணை தலைவர் தேவ், மாநில செயலாளர் மீனாதேவ்,மாநகராட்சி கவுன்சி லர்கள் அய்யப்பன், சுனில் அரசு, வீரசூர பெருமாள்,ரோசிட்டாள், ரமேஷ் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகநாதன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பாரதிய ஜனதாவினரை விமர்சித்து பேசிய மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நாளை 10-ந்தேதி நாகர்கோவில் செம்மங்குடி ரோட்டில் மாலை 5 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று மாவட்ட தலைவர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாரதிய ஜனதா கட்சியினர் எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News