ஆலயங்களை வைத்து பாரதிய ஜனதா அரசியல் செய்வதில்லை - மாவட்ட தலைவர் பேட்டி
- இந்து மதத்தை வைத்து பாரதிய ஜனதா அரசியல் செய்வதாகவும் பரப்பி வருகிறார்கள்
- பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகிய யாருமே மாற்று மதத்தை பற்றி குறை சொல்வது இல்லை
நாகர்கோவில் :
குமரி மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே இந்து ஆலய நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களை பா.ஜனதாவினர் தடுப்பதாகவும், இந்து மதத்தை வைத்து பாரதிய ஜனதா அரசியல் செய்வதாகவும் பரப்பி வருகிறார்கள். ஆலயங்களை வைத்து பாரதிய ஜனதா அரசியல் செய்வதில்லை. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இந்த பூஜைக்கு மாற்று மதத்தை சேர்ந்த ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திருவிளக்கு பூஜையில் பங்கேற்க சென்ற இந்து பெண்களை போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதுபோன்ற நடவடிக்கையை தான் பாரதிய ஜனதா எதிர்க்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகிய யாருமே மாற்று மதத்தை பற்றி குறை சொல்வது இல்லை. அதே சமயம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறை கூறி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.