உள்ளூர் செய்திகள்

குமரியில் 2-ம் கட்டமாக 23 பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம் - கலெக்டர் ஸ்ரீதர் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டார்

Published On 2023-03-01 07:26 GMT   |   Update On 2023-03-01 07:26 GMT
  • முதல் கட்டமாக 19 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது
  • குமரி மாவட்டத்தில் தற்போது 42 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது

நாகர்கோவில் :

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குமரி மாவட்டத்தில் 19 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2-ம் கட்டமாக காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கன்னி யாகுமரியிலும் 2-ம் கட்டமாக 23 பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி நாகர்கோவில் தம்மத்து கோணம் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று நடந்தது. விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு உணவுகளை பரிமாறினார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறுகையில்:-

குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 19 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலமாக 973 மாணவ மாணவிகள் பயனடைந்தனர்.

தற்பொழுது 2-ம் கட்டமாக 23 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 3175 குழந்தைகள் பயனடைவார்கள். மொத்தத்தில் குமரி மாவட்டத்தில் தற்போது 42 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலமாக 4152 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள் என்றார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் துணை மேயர் மேரிபிரின்சிலதா முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். காலை உணவு திட்டம் தந்த முதல்-அமைச்சருக்கு மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர். பின்னர் அவரது பிறந்த நாளான இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் மாணவ மாணவிகள் கூறினார்கள்.

Tags:    

Similar News