குளச்சல் அருகே தொழிலாளியை தாக்கிய மினிபஸ் டிரைவர் மீது வழக்கு
- படுகாயமடைந்த பஸ் பயணி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
- குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே வெள்ளியாக்குளம் மேற்கு கரையை சேர்ந்தவர் ஹரிகுமார் (வயது 51).கூலித்தொழிலாளி.
19 வருடத்திற்கு முன் இவர் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்ததில் இடது கால் தொடை எலும்பில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்திருந்தார். இதனால் அவரால் சரிவர நடக்க முடியாது. சம்பவத்தன்று இவர் குளச்சல் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு செல்ல குளச்சலிருந்து திக்கணங்கோடு சென்ற மினி பஸ்சில் ஏறினார்.
மினி பஸ் டிரைவர் அவரை வெள்ளியாகுளம் நிறுத்தத்தில் இறக்கி விடாமல் குளவிளை நிறுத்தத்தில் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.இதனால் டிரைவருக்கும் ஹரிகுமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மினி பஸ் டிரைவர் , தொழிலாளி ஹரிகுமாரை தாக்கினாராம்.இதில் அவருக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த இடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த ஹரிகுமார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து குளச்சல் போலீசார் மினி பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.