சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள்
- கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது
- 61 நாட்களுக்கு பிறகு களைகட்டும் துறைமுகம்
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. அந்தக் காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடல் சென்று மீன் பிடிக்க தடைக்காலமாகும். அதன்படி இந்த ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி (இன்று) வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப் பட்டது. தடைக்காலம் முடிவடைவதை முன்னிட்டு கடந்த சில நாட்களாக மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரை யேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட னர்.
மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தி னார்கள். கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைவதை தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்கள்.
இதையடுத்து கரையேற்றி பழுது பார்த்த விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் இறக்கினார்கள். அந்தப் படகுகளில் டீசல் மற்றும் தண்ணீர் நிரப்பும் பணி இன்று நடைபெற்றது. மேலும் விசைப்படகுகளில் மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை ஏற்றும் பணியும் நடந்தது. சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன் பிடிக்கச் செல்ல தயாராக நிற்கும் விசைப்படகுகளில் டீசல் நிரப்பிவருகிறார்கள்.
மேலும் படகுகளில் உள்ள குளிர்சாதன கிடங்குகளில் மீன்களைப் பதப்படுத்தி வைத்து கொண்டு வருவதற்காக ஐஸ் கட்டிகளை நிரப்பி வருகிறார்கள். இதனால் துறைமுகம் களைகட்டி காணப்படுகிறது.
நாளை (15-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன. நாளை ஒரே நாளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் இருந்து "டோக்கன்" பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர்.
நாளை அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் இந்த விசைப்படகுகள் இரவு 9 மணி முதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புவார்கள். அப்போது சீலா, வஞ்சிரம், நெய்மீன், பாறை, விளமீன், கைக்கொழுவை, நெடுவா, திருக்கை, நவரை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இவற்றை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளியூர், வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இன்றே சின்னமுட்டம் துறைமுகம் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.