நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்புகள்
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதற்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 7787 வீடுகளுக்கு இணைப்பு
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த முதல் கட்டமாக ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து 18 வார்டுகளில் முழுமையாகவும், 17 வார்டுகளில் பகுதி வாரியாகவும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் தற்பொழுது முடியும் தருவாயில் உள்ளது.
இதைத தொடர்ந்து வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க முதல்கட்டமாக ரூ. 8 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதற்கான தொடக்க விழா இன்று 27-வது வார்டுக்கு உட்பட்ட வடிவீஸ்வரம் பகுதியில் நடந்தது.
விழாவில் மேயர் மகேஷ் கலந்து கொண்டு, வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி என்ஜினியர் பாலசுப்பிரமணியன், அதிகாரிகள் ராஜேஷ் குமார், தானப்பன், துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர் கோபால சுப்பிரமணியன், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாணவரணி அமைப்பாளர் அருண் காந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தற்பொழுது நிறைவடைந்த நிலையில் பாதாள சாக்கடைக்கான சுத்திகரிப்பு நிலையம் வலம்புரி விலை குப்பை கிடங்கில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுத்திகரிக்கப்படும் தண்ணீரை தெங்கம்புதூர் பகுதியில் விவசாயத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். வலம்புரி விலை குப்பை கிடங்கில் இருந்து தெங்கம்புதூர் பகுதிக்கு பைப் லைன் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லும் இடங்களை ஆய்வு செய்து பைப் லைன் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 8 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 7,879 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளை ஒரு வருட காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதற்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 7787 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட உள்ளது. மீதமுள்ள வீடுகளுக்கும் அதைத் தொடர்ந்து இணைப்புகள் வழங்கப்படும். வீடுகளுக்கான இணைப்பு கொடுக்கப்பட்ட பிறகு பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.