உள்ளூர் செய்திகள்

குமரியில் மழை நீடிப்பு; 200 பாசன குளங்கள் நிரம்பியது

Published On 2023-05-14 07:24 GMT   |   Update On 2023-05-14 07:24 GMT
  • சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
  • அணையிலிருந்து குடிநீருக்காக 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் குளுகுளு சீசன் நிலவுகிறது. காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தாலும் இரவில் மழை பெய்து வருவதால் ரம்மியமான சூழல் நிலவுகிறது.

நேற்றும் பூதப்பாண்டி, தக்கலை, புத்தன் அணை பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் குளுகுளு சீசன் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. தற்பொழுது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திற்பரப்பில் குவிந்த வண்ணம் உள்ளனர். கேரளாவில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இன்று வருகை தந்திருந்தனர்.

இதையடுத்து திற்பரப்பு அருவியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள் குடும்பத்தோடு வந்து அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். திற்பரப்பு அருவியில் கூட்டம் அலைமோதியதையடுத்து அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 38.50 அடியாக இருந்தது.

அணைக்கு 190 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.10 அடியாக உள்ளது. அணைக்கு 110 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து குடிநீருக்காக 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களும் நிரம்பி வருகிறது.

200-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.

Tags:    

Similar News