குமரி மாவட்டத்தில் 2 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
- தேர்வு முடிவுகள் மே மாதம் 5-ந்தேதி வெளியிட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
- குமரி மாவட்டத்தில் 1500 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்கி உள்ளனர்.
நாகர்கோவில் :
தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி நிறைவுபெற்றது. இதனைத்தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வும், மார்ச் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரை நடந்து முடிந்துள்ளது. பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (10-ந் தேதி) தொடங்கியது. இந்த பணிகள் தொடர்ந்து 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து மதிப்பெண் பதிவு செய்யும் பணிகள் நடத்தப்படுகிறது.
தேர்வு முடிவுகள் மே மாதம் 5-ந்தேதி வெளியிட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. குமரி மாவட் டத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு அரசு தேர்வுகள் இயக்குநரக அறிவுறுத்தல்படி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை போன்று பிற மாவட்ட விடைத்தாள்கள் குமரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
குமரி மாவட்டத்தில் படந்தாலுமூடு தூய இருதய மெட்ரிக் மேல்நிலைபள்ளி, வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலை பள்ளி ஆகிய இரு மையங்களும் விடைத்தாள் திருத்தும் மையங்களாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (10-ந்தேதி) முதன்மை கண்காணிப் பாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்கி உள்ளனர். இவர்கள் இன்று காலை 9 மணிக்கு விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணியில் ஈடுபட்டு உள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரி யர்களுக்கு விடுப்பு அனுமதியில்லை என்றும், மருத்துவ விடுப்பில் ஆசிரி யர்கள் இருப்பின் தலைமை ஆசிரியர், தாளாளர் பரிந்துரையுடன் முகாம் அலுவலரிடம் அனுமதி பெறவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாடவாரியாக தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி, அறிவியல், கணினி தொழில்நுட்பம், வணி கவியல், கணக்குபதிவியல், பொருளியல் வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கு சுமார் 300 ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப் பாளர்களாகவும், கூர்ந் தாய்வு அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனை போன்று உதவித்தேர்வர்கள் ஏப்ரல் 11-ந்தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். இப்பணியில் சுமார் 1200 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் 1500 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்கி உள்ளனர்.