உள்ளூர் செய்திகள்

கல் குவாரிகளில் இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் கல் உடைப்பதால் வீடுகளில் விரிசல்

Published On 2023-11-02 07:24 GMT   |   Update On 2023-11-02 07:24 GMT
  • கட்டுப்படுத்த மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ் அரசுக்கு கோரிக்கை
  • கனிம வளங்களை எடுத்து செல்வதால் ரோடுகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

திருவட்டார் :

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் எம்.சான்ட், என்-சான்ட், ஜல்லி, கல் ஆகிய கனிம வளங்களை இரவு பகலாக கேரளாவிற்கு எடுத்து செல்கிறார்கள். கல்குவாரிகளை சுற்றி ஏராளமான வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.

இந்த கல்குவாரிகளில் இருந்து தினமும் இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் பாறைகள் உடைப்பதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்படுகிறது. இதனால் வீடுகள் உறுதிதன்மை இல்லாமல் நிற்கிறது. வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இரவு நேரங்களில் வீட்டில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிபடுகிறார்கள். அதிக எடையுடன் 16, 18 சக்கரம் உடைய கனரக வாகனங்களில் இரவு நேரங்களில் கனிம வளங்கள் எடுப்பதற்காக வரிசையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அதிக சத்தத்துடன் லோடு ஏற்றி செல்வதால் அந்த பகுதியில் உள்ள கல் குவாரிகளை சுற்றி குடியுருப்புகளில் வசிப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இரவு நேரங்களில் கனரக வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றி அதிகாலை வரை ரோட்டோரம் வாகனங்களை நிறுத்தி அதிக சத்தத்துடன் ஹாரன் அடித்து கொண்டோ சித்திரங்கோடு சந்திப்பில் இருக்கும் எடைமேடையில் ஒவ்வொரு வாகனமும் எடை போடுவதற்கு வரிசையில் நிற்பதால் அந்த பகுதியில் வீட்டில் உள்ளவர்க ளுக்கும், கனரக வாகன டிரைவர்க ளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிக எடையுடன் கனரக வாகனங்களில் கனிம வளங்களை எடுத்து செல்வதால் ரோடுகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

காலை, மாலையில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் செல்லும் நேரங்களில் அதிக எடையுடன் கனரக வாகனங்கள் செல்வதால் பெரிய அளவில் போக்கு வரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் பல விபத்துக்கள் நடை பெறுகிறது. எனவே அந்த பகுதியில் செயல்படும் கல்குவாரிகள் அதிக சத்தத்துடன் வெடி வைத்து பாறைகள் உடைப்பதை தவிர்த்து சிறிய அளவில் வெடி வைத்து பாறைகள் உடைக்க வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து அதிக சத்தத்துடன் கற்களை உடைக்கும் கல்குவாரிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News